இலங்கையில் இந்த பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை.!

0
30

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (sensitive groups) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மனித செயற்பாடுகளும் காற்றின் தரம் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக தீ வைப்புக்கள், வாகன புகை வெளியேற்றம் போன்றவை இதற்கு காரணமாக அமைவதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டின் வளிமண்டலத் தரச் சுட்டி அல்லது வளிமண்டலத்தின் தரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.