கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன் வேன் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், தலகலகே நிவேன் மின்னாஸ் என்ற நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாவார்.
வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது குறுக்கு வீதியொன்றை நோக்கி ஓடிய வேளையில், அந்த வீதியில் பயணித்த வேன் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது சிறுவனுக்கு வெளிப்புறக் கீறல் காயங்கள் மட்டுமே காணப்பட்ட போதிலும், பின்னர் இரத்தம் வாந்தி எடுத்ததன் காரணமாக, வேன் சாரதியே சிறுவனை கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்படும் போது போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.










