மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.20 மணியளவில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதே தலகொல்ல பகுதியில் வைத்து மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை உட்பட நான்கு பேர் சிக்கியிருந்தனர். பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து அவர்களை மீட்டனர்.
காயமடைந்தவர்கள் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 37 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயதான சிறுமி, 48 வயதான பெண் மற்றும் 57 வயதான ஆண் ஒருவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரம் சரிந்து வீழ்ந்ததில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுக்கும் அருகில் இருந்த கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் வீழ்ந்ததன் காரணமாக மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். (Videos-FB)













