இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிப்பதற்கான இணக்கம் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை சுங்கத்துறை சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன தடுத்து வைக்கப்பட்டிருந்த 625 வாகனங்களை வங்கி மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிக்க சுங்கத்துறை இணங்கியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விடுவிக்கப்படவுள்ள வாகன வகைகளில் BYD ATTO Premium (70 kW), ATTO Dynamic (45 kW), ATTO Premium (45 kW) மற்றும் Dolphin Dynamic (70 kW) ஆகியவை அடங்குகின்றன.
சுங்கத்துறையால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜமீல் இணக்கம் வௌியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களை விடுவிப்பதற்கான உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது.










