கடற்படையினரை கண்டதும் தப்பியோடிய நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
35

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரை பகுதியில் இன்று (08) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா – ஆலாங்கேணி பிரதேசத்தை சேர்ந்த ஆரியரத்தினம் முகுந்தன் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

​நேற்று இரவு (7), திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள உப்பாறு பாலத்துக்கு கீழ், இருவர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் இருப்பதை அறிந்து, கடற்படையினர் ரோந்து சென்றனர்.

​கடற்படையினர் அருகில் சென்றவேளை, அந்த இருவரும் உபகரணங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

​இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, காணாமல் போனதாக ஒருவரால் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் உப்பாறு பாலத்துக்கு அருகில் ஆரியரத்தினம் முகுந்தன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.