கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு – யாழில் கைதான சந்தேகநபர்கள்.!

0
46

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் தாம் கொழும்பில் காரினை வாடகைக்கு பெற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவும், தமக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, கொழும்பில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள விசேட குழு, கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.