1,60,200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி..!

0
70

நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகாரஅமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், இந்த திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும மூலம் நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு போசாக்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அப்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு இணங்க அந்த கொடுப்பனவு வழங்குவதை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.அந்த நிதியை பயன்படுத்தியே மந்த போசனத்துடன் காணப்படும் தாய்மாருக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தின் காலங்களில் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிதி அப்போதைய அமைச்சர்கள், ஜனாதிபதிக்கும் போய் சேர்ந்துள்ளது. அந்த வகையில் எமது அரசாங்கம் எப்போதும் மக்கள் நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றது.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினூடாக நாட்டில் வாழ்கின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ஆறு மாதங்களுக்கும் அதன் பின்னர் பாலூட்டும் காலங்களில் நான்கு மாதங்களுக்குமாக 10 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

1,60,200 கர்ப்பிணிகளை தெரிவு செய்து அவர்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதியை வழங்குவதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. 2 லட்சத்துக்கு 80 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் நாட்டில் தற்போது உள்ளனர். அவர்களில் மந்த போசனத்தோடு காணப்படும் தாய்மாரை முக்கியமாக தெரிவு செய்து உணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.