கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலேவெல மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஏ.ஜி. விமலசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மகுலகஸ்வெவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதற்கமைய, இறந்தவர் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரித்த பொலிஸார், நேற்றையதினம் (26) காலை விடுமுறையில் இருந்த ஒரு கடற்படை வீரரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த கொலை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
கடந்த 2019 ஏப்ரல் 16ஆம் திகதி, தேவஹுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையைத் தொடர்ந்து, தம்பதியரின் இரண்டு மகன்களும் தனிமையில் அநதாரவாகியுள்ளனர்.
இளைய மகன் அப்போது கடற்படையில் இணைந்து தனது பயிற்சி முடித்திருந்தார்.
குறித்த தம்பதியினரை இறந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். காணித் தகராறுதான் கொலைக்குக் காரணமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
2019 ஆம் ஆண்டு தமது பெற்றோரின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும், நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வந்த இறந்த பெண்ணின் சகோதரதே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.