இலங்கை வரலாற்றை மாற்றி எழுதிய ரணிலின் கைது.!

0
76

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தமை, இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாக பதிவாகியுள்ளது.

இன்று (22) மதியம், ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

தனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.

இது தொடர்பான ஆதாரங்களை 2025 ஜூன் 24 அன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்தது.

விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.