குருணாகல் – ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெட்டிபொல, அமுனுகொலே பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் மகன் தொலைபேசி அழைப்பு ஊடாக தினமும் நலம் விசாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி முதல் தனது தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் சந்தேகமடைந்த மகன் நேற்றைய தினம் அதிகாலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது தாயின் சடலத்தை கண்டுள்ளார்.
பின்னர் மகன் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.