யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில், வெளிமாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கி இருந்துள்ளனர்.
அக் குடும்பத்தை சேர்ந்த யுவதி ஒருவர் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்த வேளை, தங்குமிட நிர்வாகி, குளியறையின் மேல்பக்கம் உள்ள துவாரம் ஒன்றின் ஊடாக தனது தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.
அதனை கண்ணுற்ற யுவதி தனது குடும்பத்தினருக்கு சம்பவம் தொடர்பில் கூறியதுடன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தங்குமிட நிர்வாகியை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தி, அவரது தொலைபேசிகளை சோதனைகளை மேற்கொண்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்த நீதிமன்றின் அனுமதியை பெறவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த நபர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் கடமையாற்றி வந்த வேளை, அங்கும் அறை ஒன்றில் இரகசிய கமரா பொருத்தினார் என சர்ச்சையில் சிக்கி இருந்ததுடன், தங்குமிடத்திற்கு வரும் பெண்களுடனும் தவறாக நடக்க முற்பட்ட குற்றச்சாட்டுக்களும் குறித்த நபர் மீது முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி, கோண்டாவில் பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றினை பொறுப்பெடுத்து நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.