மூன்று நாட்களில் 30 பேர் உயிரிழப்பு – விபத்துக்களால் திணறும் இலங்கை.!

0
15

இலங்கையில் விபத்தக்கள் அதிகரித்துள்ளதாகவும் மூன்று நாட்களில் 30பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்தவகையில்

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் இன்று(14) காலை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை, நுவரெலியா ஆகிய இடங்களில் உள்ள அடிப்படை மருத்துவமனைகளிலும், பேராதனை மற்றும் கண்டியில் உள்ள போதனா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகியங்கனை அருகே இன்று(14) அதிகாலை சொகுசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் குறித்த சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகியங்கனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.

பின்னர் பேருந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள மலையில் மோதி நின்றுள்ளது.பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த சாலையில் இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பேருந்துகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு நேரங்களில் நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை சிறப்பு ஆய்வு செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகளுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் இரவில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதியில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் பேருந்துகளை ஆய்வு செய்து சட்டத்தை அமல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவுகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.