வாடகை வேனில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்.. சாரதி கைது.!

0
28

வாடகை வேனில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு, அந்த பெண்ணை 30 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றதாக கூறப்படும் வாடகை வேன் சாரதி ஒருவர் எல்ல பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட வாடகை வென் சாரதி நுவரெலியாவில் வசிக்கும் 70 வயதுடைய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.

இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்தவர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அல்ஜீரிய பெண் ஒருவர் நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி சுற்றுலா செல்வதற்காக வாடகை வேன் ஒன்றை ஆன்லைன் ஊடாக முன்பதிவு செய்துள்ளார்.

பின்னர் இந்த அல்ஜீரிய பெண் சந்தேக நபரின் வாடகை வேனில் நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபரான வாடகை வேன் சாரதி அல்ஜீரிய பெண்ணுக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார்.

அல்ஜீரிய பெண் அந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான வாடகை வேன் சாரதி அல்ஜீரிய பெண்ணிடமிருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி, அல்ஜீரிய பெண்ணை ராவணா எல்ல அருகே உள்ள 30 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்.

மயக்கத்திலிருந்த எழுந்த அல்ஜீரிய பெண் காயங்களுடன் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர் பொலிஸார் இணைந்து அல்ஜீரிய பெண்ணை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான வாடகை வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.