பதுளை மாவட்டம் ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுற்குட்பட்ட பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 28 வயதுடைய ராஜபக்ச முதியன்ஸலாகே நிப்புன் சஞ்சுல என குறிப்பிடப்படுகிறது.
இன்று காலை வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன், வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அவரை கட்டையால் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.
தற்காப்புக்காக வீட்டு உரிமையாளர் இளைஞனை தாக்கிய போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.
வீட்டு உரிமையாளரின் மகளுக்கும், உயிரிழந்த நபருக்கும் இடையிலிருந்த காதல் விவகாரமே இதற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ரிதிமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.