தமிழ்நாடு – கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கணவனின் தகாத உறவை கண்டித்த மனைவியை தாம்பத்ய உறவின் போது கழுத்தை நெரித்து கொன்று விட்டு, இயற்கையாக இறந்து விட்டதாக நாடகமாடிய ஜிம் மாஸ்டர் போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 34 வயதான பாஸ்கர். ஜிம் மாஸ்டரான இவர் ஓசூரில் காமராஜர் காலனி, சீதாராம் மேடு, ஜூஜூவாடி, ராஜேஸ்வரி லேஅவுட் ஆகிய 4 இடங்களில் ஜிம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி 33 வயதான சசிகலா, பெண்களுக்கான பிரத்தியோக ஜிம்மை நடத்தி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பின் மூலம் காதல் ஏற்பட்டு பின் இரு வீட்டினர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் குடும்பமாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், பாஸ்கருக்கும் ஃபேஸ்புக் மூலம் வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சசிகலாவுக்கு தெரியவந்த நிலையில, கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சசிகலா தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால், மனைவி மீது பாஸ்கர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு பாஸ்கர் மனைவியுடன் வீட்டில் இல்லற உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது சசிகலாவுக்கு திடீரென மூக்கில் ரத்தம் வந்ததாகக் கூறி, உடனே அவரை மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பாஸ்கர் அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட ஆய்வில் உயிரிழந்த சசிகலாவின் கழுத்தில் கடுமையான காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரம் பெங்களூருவில் இருந்து வந்த சசிகலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினர். சசிகலா உயிரிழப்பில் சந்தேகமடைந்த போலீசார் கணவர் பாஸ்கரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவத்தன்று பாஸ்கரும் அவரது மனைவி சசிகலாவும் மது பானம் அருந்தி உள்ளனர். ஏற்கெனவே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து சசிகலாவுக்கு அதிக மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். பின்னர் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடும் போது கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் மருத்துவமனையில் இல்லற உறவின் போது மூக்கில் ரத்தம் வழிந்து இறந்து விட்டதாக நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பாஸ்கர் சசிகலாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தததாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மனைவியை திட்டம் போட்டு கொன்று விட்டதாகவும் உயிரிந்ழத சசிகலாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தனது பெண்ணை கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு, எங்களுக்கு போன் செய்து இயற்கையாகஇறந்து விட்டடார் என பாஸ்கர் நாடகமாடியதாக சசிகலாவின் தந்தை குற்றம்சாட்டினார்.
இதையடுத்து மனைவியை கொலை செய்த பாஸ்கரை சிப்காட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனின் தகாத தொடர்பை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ஜிம் மாஸ்டர் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(பிரதி)









