பகிடிவதை சம்பவத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான் ஏப்ரல் 29 திகதி தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.
இத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்கல்வி அமைச்சு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்தவால் மூன்று பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும் 20 மாணவர்களிடமிருந்து சமனலவெவ பொலிஸார் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
பின்னர், பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த விசாரணைக்கு அமைய சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று இரவு கைது செய்தது.











