இளைஞன் உயிரிழந்த விவகாரம்.. நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு.!

0
129

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நிமேஷ் சத்சர என்ற இளைஞரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக இந்த மாதம் 23 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக இந்த மாதம் 23 ஆம் திகதி உடலை தோண்டி எடுக்க அனுமதி வழங்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியினால் கோரப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

உடலை தோண்டி எடுத்து புதிய பிரேத பரிசோதனை நடத்த மூன்று பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை நியமிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வழக்கு விசார​ணையின் போது கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேத பரிசோதனையை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மருத்துவ நிபுணர் குழுவில் விசேட சட்ட வைத்திய நிபுணர் பிரியந்த அமரரத்ன, விசேட சட்ட வைத்திய நிபுணர் பி.ஆர். ருவன்புர மற்றும் சிரேஸ்ட பேராசிரியரும் விசேட சட்ட வைத்திய நிபுணர் முதித விதானபத்திரன ஆகியோர் அடங்கியுள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்றும், எனவே அவரது உடலை தோண்டி எடுத்து புதிய பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயிரிழந்த இளைஞனின் தாயார், முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, குறித்த உடலை தோண்டி எடுத்து, புதிய பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.