முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள் தீக்கிரை..!

0
113

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 20 வள்ளங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ச்சியாக சில மாதங்களாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள் விசேட அதிரடிப்படை கடற்படை என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்வேறு சுற்றி வளைப்புகளையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு நிர்மாண விதிகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட வெட்டு வள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் (08) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது,

தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பில் அதிகரிக்கின்ற சட்டவிரோத தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற குறித்த உள்நாட்டு நிர்மாண விதிமுறைகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட பல்வேறு தினங்களில் கைப்பற்றப்பட்ட வெட்டுவள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நந்திக்கடல் களப்பை அண்மித்த பகுதியில் எரியூட்டப்பட்டன.

குறிப்பாக கடந்த 03ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்ட எட்டு வள்ளங்களும் 02 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட ஏழு வள்ளங்களும் 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட மூன்று வள்ளங்களும் 25.02.2025 அன்று கைது செய்யப்பட்ட இரண்டு வள்ளங்களுமாக 20 வெட்டு வள்ளங்கள் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் மீனவர்களை சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சட்டபூர்வமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.