மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு – தாய்லாந்தும் குலுங்கியது..!

0
168

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மியான்மரின் மத்திய பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தாய்லாந்திலும் கடுமையாக உணரப்பட்டுள்ளது. தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் 103 பேர் பலி, தாய்லாந்தில் 4 பேர் பலி;

இதுவரை 107 பேர் உயிரிழந்ததாகவும், பாங்காக் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. இதுவரை 90 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 350 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.