நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் மூன்று பாதசாரிப் பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (27) மஹரகம, ருவான்வெல்ல, கடுவெல மற்றும் எகொடஉயன ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
மஹரகம, பன்னிபிட்டிய சந்திக்கருகில் மஹரகம நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ருவான்வெல்ல, பன்னல பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரிப் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கடுவெல சந்திக்கருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், ஓட்டுநர் அதே திசையில் பயணித்த லொறி ஒன்றில் சிக்கி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லேரியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை எகொடஉயன சந்திக்கருகில் மொரட்டுவ நோக்கிப் பயணித்த பாடசாலைச் சேவை தனியார் பேருந்து ஒன்று, வீதியைக் கடந்த பாதசாரிப் பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்தார்.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.










