பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களும், பல்வேறு மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மீது கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வழிநடத்திய ‘கொண்ட ரஞ்சி’ என்ற ரஞ்சித் குமாரவின் முக்கிய உதவியாளரான ‘சூட்டி மல்லி’ என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ‘ஊரகத இந்திக்க’ எனும் குற்றவாளியின் நெருங்கிய சகா வான ரவீன் சமிந்த வீரசிங்க எனப்படும் ‘புஞ்சா’ என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள பெண், இலங்கையில் பல நிதி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை, ‘கொண்ட ரஞ்சி’ என்பவரும் தமது தடுப்புக்காவலில் உள்ளதாக டுபாய் அரசு, இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையில், அவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









