திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜ்கபூர் ராசீத் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இராணுவ லொறி ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்தவருக்கு, திருமணமாகி 22 நாட்கள் எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













