யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று இளைஞர்கள் நேற்றுமுன்தினம் (09) மாலை குறித்த குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்றனர். இதன்போது மேற்படி இளைஞர் தூண்டிலைக் குளத்தில் வீசிய வேளை தூண்டில் முழுவதுமாக குளத்தில் விழுந்தது.
இதன்போது அந்த இளைஞர் தூண்டிலை எடுப்பதற்குக் குளத்தில் இறங்கிய வேளை நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்றுவதற்கு அங்கு நின்றவர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்றுக் காலை கே.கே.எஸ். கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மேற்படி இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை: தற்போதைய மழைக் காலங்களில் நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதோடு, பல குளங்கள் ஆழம் அறிய முடியாத நிலையில் உள்ளன. எனவே, பொழுதுபோக்கு என்றாலும் ஆபத்தான நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.










