பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (08) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் காயமடைந்த குறித்த இளைஞர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணத்தகராறு முற்றியமையினால் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 54 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










