இலங்கையில் பாரிய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பின்வருவன அடங்கும்…
பொருள்: 2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் வசிக்கக்கூடியவாறு சீரமைப்பதற்காக ரூ.25,000/- கொடுப்பனவு வழங்குவது தொடர்பான வழிகாட்டல்.
2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் வசிக்கக்கூடியவாறு சீரமைப்பதற்காக ரூ.25,000/- கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக 02.12.2025 திகதியிடப்பட்ட NDRSC/02/04/10 எனும் இலக்க கடிதத்திற்கு மேலதிக அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக இவ்வழிகாட்டல் வெளியிடப்படுகிறது.
- ரூ.25,000/- கொடுப்பனவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி
21.11.2025 முதல் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக:
- முழுமையாக சேதமடைந்த வீடுகள்
- பகுதியளவு சேதமடைந்த வீடுகள்
- வீட்டிற்கு சேதம் ஏற்படாத போதிலும் சிறிய அளவிலான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள்
மேற்கூறிய அனைத்து வகையினரும் இச்சலுகைக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
2. வீட்டு உரிமை
இக்கொடுப்பனவை வழங்கும்போது, காணி உரிமையை கருத்தில் கொள்ளாமல் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இக்கொடுப்பனவானது நிரந்தர வதிவிட வீட்டு உரிமையாளர்கள், தோட்டப்புற வீடுகளில் வசிப்பவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், அத்துமீறிய குடியிருப்பாளர்கள், அரச வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையங்கள் ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும்.
3. மானியக் கொடுப்பனவின் அடிப்படை
- நவம்பர் 21, 2025 முதல் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டு அலகிற்கு, சேத மதிப்பீடு இன்றி ரூ.25,000/- கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
- அதன்படி, ஒரே வீட்டு அலகில் பல குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் வசித்தால், இக்கொடுப்பனவு அக்குடும்பங்கள் அல்லது தனிநபர்களுக்கிடையில் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்.
- வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீட்டிற்கான கொடுப்பனவு, வாடகைதாரருக்கே வழங்கப்பட வேண்டும். வாடகை வீட்டில் பல குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் வசித்தால், இக்கொடுப்பனவு அக்குடும்பங்கள் அல்லது தனிநபர்களுக்கிடையில் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்.
- வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்கள் அல்லது வேறு நபர்களுடன் ஒரே வீட்டில் வசித்தால், இக்கொடுப்பனவு அவர்களுக்கிடையில் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்.
4. 21.11.2025 முதல் ஏற்பட்ட பரந்தளவிலான அனர்த்த நிலைமை காரணமாக மட்டுமே இக்கொடுப்பனவு வழங்கப்படுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீட்டு அலகுகளுக்கும் முழுக் கொடுப்பனவுத் தொகையும் ஒரே தடவையில் வழங்கப்பட வேண்டும். (இது ஒரு முற்பணம் அல்ல). தயவுசெய்து வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, தேவையான ஏற்பாடுகளை உடனடியாகக் கோருங்கள்.
வீட்டுச் சேதங்களை மதிப்பிட்டு, தேவையான ஏற்பாடுகளை உடனடியாகக் கோருமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவம் – Download
இது தொடர்பாக மேலதிக தகவலுக்கு உங்கள் பிரதேச கிராம சேவகரை தொடர்பு கொள்ளுங்கள்.












