வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று (6) ஒப்படைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இச்சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார்.
சம்பவத்தன்று குறித்த வீட்டில் தாய், தந்தை, மகள் ஆகியோர் இருந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வீட்டினுள் இயங்கிய ஜெனரேட்டரிலிருந்து கசிந்த வாயுவினால் ஏதோ அனர்த்தம் நேர்ந்துள்ளதை உணர்ந்த உறவினர்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
காபன் மொனொக்சைட் (Carbon monoxide) காற்றுடன் கலந்து நஞ்சாகிய நிலையில், அதனை சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.










