இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை, தோட்ட யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அஸ்வெசும பணத்தினை பெற இரத்தினபுரிக்கு சென்ற, ஹப்புகஸ்தென்ன கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபிஷானி (வயது-20) என்ற யுவதி நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி அணிந்திருந்த ஆடைகள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்டுள்ளதுடன், அவரது கால்சட்டை பையில் 11,000 ரூபா பணம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டெமோதர ஆற்றிலிருந்து வெவல்வத்திலுள்ள பனகொட சிறிய நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் குழாயின் அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை மணி நேரம் உடல் அடையாளம் காணப்படவில்லை எனவும், பின்னர் இறந்த யுவதியின் பெற்றோர் தங்கள் மகள் என அடையாளம் கண்டுள்ளனர்.
இது குறித்து வேவல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரும் பிரதேச மக்களும் தீவிர தேடுதல் வேட்டையில். ஈடுபட்ட நிலையில் இரத்தினபுரி குடுகல்வத்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் பிரதேச மக்கள் சந்தேக நபரைக் கண்டுள்ளனர்.
பிரதேச மக்கள் தம்மை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இப்பகுதியிலுள்ள மதஸ்தலத்திற்கு ஓட முயற்சி செய்த போது அந்த மதஸ்தலவாசலில் நின்ற மக்கள் அவரைத் தடுத்து விபரம் அறிந்த போது தம்மை பொய் குற்றச்சாட்டின் பேரில் தாக்குதல் நடத்த சிலர் வருவதாகக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் உண்மை நிலை அறிந்து சந்தேக நபரை மதஸ்தலத்திற்கு வருகை தந்தவர்கள் இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் சந்தேக நபரை வேவல்வத்தை பொலிஸார் கைது செய்து இரத்தினபுரி நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதாக கூறுகின்றனர்.
இது இவ்வாறிருக்க யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் தேடி கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும் சந்தேக நபர் சென்று சடலத்தை தேடியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் செருப்பு இறந்த யுவதியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
பேபிஷானியை சந்தேக நபர் சம்பவ தினம் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் உடன் அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகிறது. ஏன் கொலை செய்தான் என்று இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை.
இப்பகுதி தோட்ட மக்கள் மத்தியில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












