நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்..!

0
194

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளையதினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதற்காக 11.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் பதிவு செய்து பணம் பெறுபவர்கள் மற்றும் பணம் பெறாதவர்ளுக்கு முக்கிய அறிவிப்பு..!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, ​​குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QRதாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம்.
அவ்வாறு இல்லையெனில், பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம்.

அதன்படி, அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும் என்றும், பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

(HH இலக்கம் தெரியவில்லை என்றால் https://iwms.wbb.gov.lk/household/search என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் தேசிய அடையாள அட்டையை உள்ளிட்டு HH இலக்கத்தை கண்டுபிடிக்கமுடியும்.)