அஜர்பைஜான் எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்ஜியாவில் துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அஜர்பைஜானிலிருந்து புறப்பட்ட C-130 ரக சரக்கு விமானம் நேற்று (11) மாலை மலையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த சமயத்தில் விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 துருக்கிய இராணுவ வீரர்கள் இருந்ததாகவும், பிற நாட்டினரைச் சேர்ந்த பயணிகள் எவரும் இல்லையெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நேரங்களிலேயே ஜோர்ஜியாவின் காகசஸ் மலைப்பகுதியில் அது காணாமல் போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளானது உறுதிசெய்யப்பட்டது.
துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “விமானத்தில் இருந்த 20 பேரும் இராணுவ பணியாளர்களே. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விபத்து இடத்தை அடைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.










