ஏறாவூரில் போதை பொருளுடன் கைது செய்த வியாபாரி விழுங்கிய 28 பக்கட் ஹெரோயினை மலம் கழிக்க வைத்து மீட்பு.!

0
42

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டபோது வாயில் விழுங்கிய 28 பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (8) இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த குறித்த போதைப்பொருள் வியாபாரி, சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (7) இரவு கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (8) ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அன்றைய தினமே மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட குறித்த நபர், சிறைச்சாலை அதிகாரியிடம், தன்னைக் கைது செய்யும்போது தன்வசம் இருந்த 28 சிறிய பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கிவிட்டதாகவும், இது தொடர்பாகப் பொலிஸாரிடம் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்துச் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபரைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்கச் செய்தபோது, மலத்துடன் வாயில் போட்டு விழுங்கப்பட்ட 28 பக்கெட்டுகளைக் கொண்ட 1960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 45 வயதுடைய அவர் நீண்ட காலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இந்த வழக்கிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.