ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த UL 266 விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது, அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்து தங்கள் இருக்கையில் அமருமாறு அறிவிக்கப்பட்ட போதும், அதனை மீறி குறித்த பயணி கழிப்பறைக்குச் செல்ல முயன்றதால், அங்கு மோதல் ஏற்பட்டது.
பின்னர் பணிப்பெண்கள் இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரான சவுதி அரேபிய நாட்டவரை கைது செய்தனர்.
மலேசியாவுக்குச் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்த 28 வயதான குறித்த சவுதி அரேபிய நாட்டவர், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.









