இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை துறந்து காசா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும், காசா பகுதியை நிர்வகிக்க சர்வதேச அளவிலான ஒரு குழு உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட 20 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், காசா பகுதியை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட சில அம்சங்களை ஹமாஸ் ஏற்கவில்லை.
எகிப்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், ஒப்பந்தப்படி இஸ்ரேல் படையினர் வெளியேறியதும் காசா பகுதியை ஹமாஸ் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். வீதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, காசா பகுதியை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 8 பேர் வீதியில் மண்டியிட்டிருக்க, ஹமாஸ் குழுவினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கின்றனர். அப்போது ஹமாஸ் குழுவினர், “அல்லாஹு அக்பர், இவர்கள் குற்றவாளிகள், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டனர்” என கூறுகின்றனர்.