தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில்…
670 கிலோகிராம் ஐஸ் (Ice)
156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin)
12 கிலோகிராம் ஹஷீஷ் (Hashish)
தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 50 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.
இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில், மூன்று படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த மூன்று படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.