நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றுக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரில் கெஹேல்பத்ர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது,இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ, சாட்சிக் கூண்டில் நின்ற போது, சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை கெஹேல்பத்ர பத்மேயின் உத்தரவின்பேரில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு உதவி புரிந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், சட்டப்புத்தகத்துக்குள், மறைத்து வைத்து துப்பாக்கிதாரிக்கு, துப்பாக்கி ஒன்றை கொண்டு சென்று வழங்கியதாக கூறப்பட்ட இஷாரா செவ்வந்தி இதுவரை காலம் தலைமறைவாகியிருந்தார்.
இந்தநிலையில், அண்மையில், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹேல்பத்ர பத்மே உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் காத்மண்டு நகரை அண்மித்த பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கெஹேல்பத்ர பத்மேவுடன் செயற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரின் உதவியுடன் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டு நான்கு நாட்களின் பின்னர், இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு சென்றுள்ளதுடன், அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்துள்ளார்.
அதன் பின்னர் இந்தியாவிலிருந்து அவர் நேபாளத்திற்கு சென்று தலைமறைவாகி இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இஷாரா செவ்வந்திக்காக கெஹேல்பத்ர பத்மே பல இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையின் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வுட்லர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது,
தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நீண்ட மற்றும் ரகசியத் திட்டத்தின் பின்னர், சிறப்பு போலீஸ் குழுவால் இந்த சோதனையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தது.
முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, மற்றொரு பெண் சந்தேக நபர் மற்றும் நான்கு சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் ஆறு சந்தேக நபர்கள் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடுத்த சில நாட்களில் நாடுகடத்தல் சட்டத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கையானது இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதில் ஒரு முக்கியமான படியாகும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை யாழ்ப்பாணம், கம்பஹா, நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு இஷாரா செவ்வந்தியுடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை விசாரணை அதிகாரிகளை திடுக்கிட வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த 8 மாதங்களாக பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு ஆட்டம் காட்டிய இஷாரா செவ்வந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இனிவரும் நாட்களில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை குறித்த சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளில் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய விடயங்கள் அம்பலமாகும் எனவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.C