நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 05 வயது சிறுமி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அறுவர் உயிழந்தனர்.
ஜா-எல-மினுவங்கொட வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவங்கொட திசை நோக்கிச் சென்ற கார், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஜா-எல, கனுவான பகுதியைச் சேர்ந்த 60 வயதான வயோதிபர் என தெரியவந்துள்ளது.
அதேநேரம், தெனியாய-அக்குரஸ்ஸ வீதியில் 61வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் தெனியாய திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னாள் சென்ற கெப் வண்டி மற்றும் பேருந்தையும் முந்திச் செல்ல முயன்றபோது பேருந்துடன் மோதியது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவரும் பலத்த காயமடைந்து கொஸ்னில்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செலுத்துனர் உயிரிழந்தார். இறந்தவர் மொரவக்க பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கொள்ளுப்பிட்டி – கடுவலை வீதியில் தலாஹேன பகுதியிலும் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
மாலபே திசையிலிருந்து கொஸ்வத்தை திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து இழுத்துச் சென்று எதிர்திசையில் வந்த காரில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சாரதியும் பின்னால் பயணித்தவரும் பலத்த காயமடைந்து கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செலுத்துனர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பத்தரமுல்லை ஸ்ரீ சுபூதிபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம்-மன்னார் வீதியில் 18 ஆவது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் பூநகரி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் செலுத்துனரும், பின்னால் அமர்ந்து சென்ற அவரது உறவினரான சிறுமியும் பலத்த காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்தார்.
கொடிகாமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
அதேநேரம் புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜனும் உயிரிழந்துள்ளார். புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 55 வயதான பொலிஸ் சார்ஜென்ட் என்பதுடன், இவர் புத்தளம், சாலிய வெவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.