நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை மற்றும் பாடசாலை மாணவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
பேராதனை, உடுகம, கடவத்தை, ராகம மற்றும் மாவதகம பொலிஸ் பிரிவுகளில் நேற்று (09) இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
கண்டி – குருநாகல் பிரதான வீதியில் 06வது மைல்கல் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலி மற்றும் மின்சார தூணில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை படுகாயமடைந்து, மாவதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது.
காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், உடுகம பொலிஸ் பிரிவில் உடலமத்த-உடுகம வீதியில் உடலமத்த பகுதியில், உடுகம திசையிலிருந்து உடலமத்த திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கோனதெனி பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பேராதனை-கட்டுகஸ்தோட்டை வீதியில் கன்னொருவ பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் பேராதனை, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த 57 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவல பகுதியில் பிரைமூர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி நிறுத்தப்பட்டிருந்த அனர்த்த வாகனம் மீது மோதி அருகிலுள்ள இரண்டு பாதசாரிகள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இரண்டு பாதசாரிகளும் பலத்த காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றைய பாதசாரி மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இறந்தவர் ராகம, நெலிகம பகுதியைச் சேர்ந்த 27 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.