அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்ட பெண் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோரின் வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, கொலைசெய்யப்பட்ட பெண் தனது வீட்டு வாசலில் கையடக்கத் தொலைபேசி அழைப்பு ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து காயமடைந்த பெண்ணை இராஜாங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.