நேற்று (22) நடந்த விபத்துக்களில் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு.!

0
86

நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹியங்கனை, பெல்மதுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் நேற்று (22) இந்த விபத்துகள் நிகழ்ந்தன.

கண்டி-கட்டுகஸ்தொட்டை வீதியில் சியம்பலதென்ன சந்திக்கு அருகில், கண்டி திசையிலிருந்து கட்டுகஸ்தொட்டை திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்தார்.

இறந்தவர் அக்குரணையைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் தெம்பிலியான பகுதியில் கொழும்பு திசையிலிருந்து நுவரெலியா திசை நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தின் மின்கலன் பெட்டியின் கதவு திறந்து வீதியில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

இதற்கிடையில், கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பாதகட சந்தியில், இரத்தினபுரி திசையிலிருந்து பெல்மடுல்ல திசை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, வீதியை கடந்து சென்ற, ​​மாடு ஒன்றுடன் மோதி பின்னர் கவிழ்ந்து எதிர் திசையில் வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்த மூன்று பயணிகளும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலை, மஹியங்கனை பொலிஸ் பிரிவில், மஹியங்கனை – பதியதலாவ வீதியில், கோனகல சந்திக்கு அருகில் பதியதலாவ திசை நோக்கிச் சென்ற கெப் வண்டி, அதே திசையில் முன்னாள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தார்.

இறந்தவர் மஹியங்கனை, மாபகடவெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த கெப் வண்டியின் சாரதியும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.