பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் வர்த்தமானியில்..!

0
66

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனால் இன்று (22) பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தும் வரை அல்லாமல், எமது கொள்கை பிரகடனத்தில் கூறியதைப் போன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அது தொடர்பில் ஆராய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலப்பகுதியில் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டது.அந்த குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியிருந்தது.

திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இந்த மாதத்திற்கு இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் ஆரம்ப பகுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது அமுலில் உள்ளது.

அந்த சட்டத்தின் ஊடாக இனம், மதம் என்ற அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

மாறாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

அந்த சட்டத்தை திருத்தம் செய்ய மற்றும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்தார்.