செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு; விசாரணையில் வௌியான தகவல்.!

0
27

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்:

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம். 1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது. செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது. இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன். எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார்