62,000 பேரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி.!

0
64

அரசாங்கத்தை நவீனமயமாக்குவதே தனது இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்தை நவீனமயமாக்குவதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறினார்.

“எங்கள் அரசாங்கம் வேலை வழங்கும் மையம் அல்ல, மாறாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகும். அரச சேவையானது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தையும் சமூக நிறுவனத்தையும் கட்டமைக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் இடிபாடுகளின் குவியல் போன்று உள்ளது. அதை நவீனமயமாக்க, 62,000 பேரை அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாங்கள் மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்யவில்லை. ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்யவும் இல்லை. ஆனால், அரச சேவையைப் பராமரிக்கத் தேவையான 62,000 பேர் நாடு முழுவதும் இனங்காணப்பட்டு, அவர்களை விரைவில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளோம். இது வேலைவாய்ப்புப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காது. ஆனால் அரசாங்க செயல்முறைகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்குவோம். அதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். சுற்றுலாத் துறையில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறோம். 2030ஆம் ஆண்டுக்குள் இதை 4 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தற்போது 4 பில்லியன் டொலர்களாக உள்ள சுற்றுலாத் துறையின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 8 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே எங்கள் இலக்கு. சுற்றுலாத் துறையை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தை கட்டமைப்போம். இதுவே அரசாங்கத்தின் திட்டமாகும்,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.