போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட நபர் எடுத்த முடிவு.!

0
106

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் கீர்த்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது,

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சந்தேகநபர் உயிருடன் இல்லை. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமையினால் மன உளைச்சலுக்குள்ளாகி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் அன்று இலங்கை சட்டத்தின் கீழ் பிணையில் வெளி வரமுடியாத குற்றச் செயலான 3,200 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறி தெஹிவளை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

இரண்டு மாதங்கள் கழித்து, தான் நியாயமற்ற முறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் வழக்கு விசாரணை மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் எந்தவொரு போதைப்பொருளையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்பதை அரசு பகுப்பாய்வாளரின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. துரதிர்ஷ்டவசமாக அவர் உயிருடன் இல்லை. உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து போதைப்பொருள் வழக்குகளிலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை விடுவித்தது.

தவறுதலாக கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவல்களில் தடுத்து வைத்தல் என்பன அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளால் அவர்களுக்கு வேலை இழப்புகள், குடும்பங்களில் விரிசல் மற்றும் பிள்ளைகள் புறக்கணித்தல் போன்ற துயர சம்பவங்கள் இடம்பெறும்.

இவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுதோடு மட்டுமல்லாமல், முறையற்ற விசாரணைகள் மற்றும் சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதால் அவர்களின் வாழ்க்கை சரிசெய்ய முடியாத அளவுக்கு அழிக்கப்படுவதை நாம் காண்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.C