முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது.!

0
146

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

யார் இந்த இனியபாரதி..?

கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் இயங்கும் பிள்ளையான் குழுவை சேர்ந்த திரு இனியபாரதி என்பவனுக்கு 2011 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சே அவர்கள் ‘தேசமான்ய’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்து இருந்தார் .
இலங்கை அரசாங்கம் சார்பில் சமூக சேவைக்காக வழங்கப்படும் ‘ஸ்ரீலங்காபிமானையா’ (Sri Lankabhimanaya) ‘தேசமான்ய’ (Pride of the Nation) ஆகிய இரு பட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் உயர்ந்த பட்ச அங்கீகாரமாகும்.

ஆனால் சமூகவிரோதியாக அடையாளம் காணப்படும் திரு இனியபாரதி கிரிமினல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு இருந்த போதும் இலங்கை அரசாங்கம் ‘தேசமான்ய’ (Pride of the Nation) என பட்டம் வழங்கி கெளரவித்து இருந்தது குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக் கடவை வீதியில் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றில் 164.3 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடத்திய நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இருந்தான்.

அதே போல அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கஞ்சாக் கடத்தல் இனியபாரதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு இருந்தான்.

இது தவிர, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமிழின துரோகி இனியபாரதி குழுவினர் தமிழ் பொதுமக்களை கடத்தி காணாமலாக்கியது தொடர்பான முறைப்பாடுகளை சாட்சியங்களுடன் பலர் பதிவு செய்து இருக்கின்றனர்.

குறிப்பாக அம்பாறையில் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் கஞ்சாக் கடத்தல் இனியபாரதி பொதுமக்களை கடத்த பயன்படுத்திய இலக்கத்தகடற்ற வெள்ளை வேனை இலங்கை பத்திரிகையாளர் மன்றத்தை சேர்ந்த திரு உவிந்து குருகுலசூரிய என்கிற சிங்கள பத்திரிகையாளர் படங்களுடன் அமபலப்படுத்தி இருந்தார்.

மகிந்த ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான சிங்கள வர்த்தகர் ஒருவரை கடத்தி அவரிடம் 8 கோடி ரூபா கப்பம் பெற்றுவிட்டு அவரின் வாகனத்துடன் வெலிகந்த பகுதியில் புதைத்த விடயங்களும் பொலிஸ் பதிவேடுகளில் இருக்கின்றது.

இது போதாதென்று கடத்தல்காரன் இனியபாரதி வெளிநாடுகளுக்கு பலரை சட்டவிரோதமாக அனுப்பியது தொடர்பான குற்றச்சாட்டுகளும் பொலிஸ் முறைப்பாடுகளில் இருக்கின்றன
பாராளமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த போது அவரின் அம்பாறை இணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த இவன் அரச அதிகாரத்தை பயன்படுத்தி சகலவிதமான குற்றங்களிலும் ராஜபக்சே குடும்பத்தின் உதவியுடன் ஈடுபட்ட ஒருவனுக்கு அரசாங்கம் சார்பில் பட்டங்கள் வழங்கி அங்கீகரிப்பதை எப்படி புரிந்து கொள்ள முடியும்.

கெளரவ கலாநிதி மேர்வின் சில்வா முதல் ‘தேசமான்ய’ இனியபாரதி வரை அதிகாரம் செலுத்தும் இலங்கை தீவில் போதும் திரைப்பட நடிகைகள் அங்கீகாரம் பெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது. (FB)