கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் பயணப் பையில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்திற்கு பை ஒன்றில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற அங்கு வசிக்கும் பெண் உட்பட இரு பெண்கள், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்பு பிரிவு பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
அப்போது, அந்த பெண்ணின் பையில் T56 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
தங்கள் மோட்டார் வாகனத்தின் பூட்ட முடியாத நிலையில் இருந்த டிக்கியில் யாரோ ஒருவர் இந்த துப்பாக்கியுடன் கூடிய பையை வைத்திருந்ததாகவும், அது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி என நினைத்து எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 72 மணி நேர பொலிஸ் காவல் உத்தரவு பெறப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் போது, முக்கிய சந்தேக நபரான பெண், அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) பிரபல அரசியல்வாதி ஒருவர், தனது வீட்டில் பணியாற்றும் சமையல்காரர் மூலம் இந்த துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சமையல்காரர் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணை அதிகாரிகள், இந்த துப்பாக்கியை அவருக்கு வழங்கியதாக கூறப்படும் அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், இன்று (22) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை அடுத்து, இலங்கை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீரவிடம் இந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “பொலிஸாருக்கு முழு அதிகாரம் உள்ளது. விசாரணைகளை மேற்கொண்டு, அவை யாருடையவை என்பதை கண்டறியுங்கள்,” என தெரிவித்தார்.