அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் பயங்கரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியுள்ளார்.இந்த விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது…
துப்பாக்கி சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திய நபரை கைது செய்த போது, பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஐ.நா.சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் கூறியதாவது:
யூத சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது எல்லை மீறி உள்ளது. யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் இது. இந்த மோசமான குற்றவாளியை நாங்கள் நீதியின் முன் நிறுத்துவோம். இந்த குற்றச் செயலுக்குப் பொறுப்பானவர்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், உலகில் எல்லா இடங்களிலும் அதன் குடிமக்களையும் பிரதிநிதிகளையும் பாதுகாக்க இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாகச் செயல்படும் என்றார்.