அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய மசோதாவை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வரையறுத்து உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி விதிப்பால் 45 லட்சம் இந்தியர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.