ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எனினும், இவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது வீரர்கள் என்றோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், 20 ஆயிரம் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர் என சான்றுகள் எதனையும் வெளியிடாமல் இஸ்ரேல் கூறுகிறது.
நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியது.
இந்நிலையில், காசா முனையின் டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 64 பேர் பலியானார்கள்.
இந்த சூழலில், காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் விமான படை புதிதாக நடத்திய தாக்குதலில் 146 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஆனால், உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறும்போது, 459 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.
புதிதாக தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வியாழ கிழமையில் இருந்து கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல் போனது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணம் நேற்று முடிந்தது. எனினும், புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.
டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணம் முடியும் வரை தாக்குதல் நடத்தப்படாது என இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் நடந்துள்ளது.
காசாவில் 76 நாட்களுக்கு முன்பே, நிவாரண உதவிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி விட்டது. இந்நிலையில், பஞ்சம் பரவியுள்ளது என ஐ.நா. நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்து உள்ளனர். இனப்படுகொலைகளை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க என்ன செய்ய போகிறது? என அதன் நிவாரண உதவிக்கான தலைவர் பிளெட்சர் வார தொடக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
டிரம்பும், காசாவில் பசி நெருக்கடி அதிகரித்து வருகிறது. நிவாரண உதவிக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது என நேற்று ஒப்பு கொண்டார். காசா முற்றுகையை நிறுத்தும்படியும், பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்பும்படியும் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.
ஆனால் இஸ்ரேலோ தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்த வார தொடக்கத்தில் கூறும்போது, காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் குழுவை அழிக்கும் நோக்கில் காசா முனையில் இஸ்ரேலின் போர் தீவிரப்படுத்தப்படும் என கூறினார். நெதன்யாகு கூறியதன்படி, இந்த நடவடிக்கை (தாக்குதல்) தொடங்கப்பட்டு உள்ளதா? என்ற விவரம் தெளிவாக தெரிய வரவில்லை. (video-FB)