அம்மோனியா உரத்தை யூரியா உரமாக மாற்றி விற்பனை செய்த நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் உட்பட 12 பேர் கைது..!

0
38

அம்மோனியா உரத்தை யூரியா உரம் என்று கூறி,மோசடி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய உதவிய 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சிறிபுர நகரில் விவசாய உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 13 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அம்மோனியா உரத்தை யூரியா உரமாக மோசடியாக பொதி செய்து விவசாயிகளுக்கு அதிக விலைக்கு விற்றதன் மூலம் மோசடிக்கு உதவியதற்காக நிறுவனத்தின் முகாமையாளர் உட்பட 12 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 23 முதல் 53 வயதுக்குட்பட்ட சிறிபுர, புலத்கோஹுபிட்டிய மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், பரிமாற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட 1,565 உர மூட்டைகள், உர போக்குவரத்துக்காக தயாராகவிருந்த 05 லொறிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் 13,585 வெற்று உரப் பைகள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (14) தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பிரதேச குற்றப் விசாரணை பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.