மாங்குளம் பகுதியில் உள்ள பூட்சிற்றி ஒன்றிற்கு 46,000 ரூபா தண்டம்.!

0
33

மனித நுகர்வுக்கு ஒவ்வாத பலசரக்கு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது சுகாதார பரிசோதகர்களினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் உணவு கையாளும் நிலையங்கள், பூட்சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்த 23.04.2025ம் திகதி மாங்குளம் பகுதியில் உள்ள பூட்சிற்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது பூட்சிற்றி ஒன்றில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மேற்படி பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்ந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்ட மேலதிக நீதவான் பூட்சிற்றி முகாமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 46,000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கினார்.