மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளில் ஊழலைத் தடுக்க விசாரணைப் பிரிவுகள் அமைக்க அனுமதி.!

0
29

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்ட விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகளிலும் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவ ஜனாதிபதி இதற்கான அனுமதியை வழங்கினார்.

மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதோடு, குறித்த பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த வருடத்தை விட மாகாண சபைகள் மூன்று மடங்கு நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளதால், ஒரு வருடத்திற்குள் நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

அந்த ஏற்பாடுகளை சரியான முறையில் நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணகுலசூரிய, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்தகுமார விமலசிறி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.